

இத்தாலியில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 369 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக இத்தாலியில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதுகுறித்து இத்தாலி நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, ”இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 369 பேர் பலியாகினர். கடந்த சில வாரங்களாக இத்தாலியில் கரோனா தொற்றால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 93,245 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இத்தாலியில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெற்றிகரமாக கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்ததாக இத்தாலி ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
முன்னதாக, மார்ச் மாதத் தொடக்கத்தில் இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மார்ச் 9-ல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே.
இந்த நிலையில் மே 4-ம் தேதி முதல் இத்தாலியில் பொதுமுடக்கம் மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் இத்தாலியில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.