

சவுதியில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த வாரம் தளர்த்தப்பட்ட நிலையில், பணியாளர்கள் பணிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் 31,938 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 209 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ரம்ஜானைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சவுதி அரசு ஊரடங்கை மெல்லத் தளர்த்தியது. அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 5 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து தலைநகர் ரியாத்தில் பணியாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த வாரம் முதல் சில துறைகள் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளன. நாங்கள் மற்ற நாட்களைப் போல தொடர்ந்து பணி செய்து கொண்டிருகிறோம்” என்றார்.
எனினும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் சமூக இடைவெளி மற்றும் அரசு தெரிவிக்கும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு மெல்லத் தளர்த்தப்பட்ட நிலையில், சவுதியில் நேற்று அதிகபட்சமாக 1,687 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.