

கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள போதிய நிதியின்றித் திணறி வரும் நேபாளம் நாட்டுக்கு சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) 214 மில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா வைரஸால் பொருளாதார ரீதியாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நேபாளத்தை மீட்டெடுக்க இந்த நிதி வழங்கப்படுவதாக சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதே நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா வைரஸ் நேபாளத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. சுற்றுலாத் துறை, தொழில் செயல்பாடுகள் என வருவாய்க்கான அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ள நிலையில், நாட்டின் நிதி நிலைமை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
கரோனாவை எதிர்கொள்ள சுகாதார நடவடிக்கைகளுக்கு நேபாளம் அதிகம் செலவிட்டு வருகிறது. மருத்துவப் பணியாளருக்கு ஊக்கத்தொகை, உணவின்றித் திணறி வருபவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற சமூகச் செயல்பாடுகளுக்கு அது செலவிட்டு வருகிறது. இந்நிலையில் ஐஎம்எஃப்பின் நிதி உதவி நேபாளத்துக்கு பக்கபலமாக அமையும். தற்போதையை நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாக அது இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
2.8 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நேபாளத்தில் இதுவரையில் 99 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைக்களுக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலைக்கு நேபாளம் தள்ளப்பட்டு இருக்கிறது.
நேபாளின் வருவாயில் சுற்றாலத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது கரோனா வைரஸால் சுற்றுலாத் துறை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பெரும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியிருக்கிறது.