

ஏப்ரம் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80,000 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில் இந்தியா, வங்கதேசம், ஆப்ரிக்கா, தென் கிழக்காசிய நாடுகளில் தொற்று அதிகரித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:
''உலக அளவில் 35 லட்சம் பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 2.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். குறிப்பாக ஏப்ரல் மாத்தில் மட்டும் சராசரியாக நாளொன்றுக்கு 80,000 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவை வெறும் எண்கள் அல்ல. தாய், தந்தை, மகன், மகள், நண்பர் என்ற மனிதர்கள்.
கரோனாவால் இயல்பு வாழ்க்கை மாறி இருக்கிறது. உலக நாடுகள் அதன் மக்களுக்குப் புதிய இயல்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது நாடுகள் கரோனாவுக்கு எதிரான முயற்சிகளை மேற்கொண்டு வருகிற அதே நேரத்தில் அவை உலக அளவில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களிலும் இறங்க வேண்டும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நோய்ப் பரவலின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா, வங்கதேசம், ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு நாடும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும். தற்போது பல நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. மிக கவனமாகக் கையாளாவிட்டால், பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். உலக சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் கரோனாவிலிருந்து நாம் பெறும் படிப்பினை''.
இவ்வாறு ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.