

கூகுள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (43) நியமிக்கப்பட்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜ் திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பேஜ், தனது வலைப்பகத்தில், "ஆல்ஃபபெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படுகிறது. அதில் கூகுளும் முக்கிய பங்கு வகிக்கும். புதிதாக தொடங்கப்படும் ஆல்ஃபபெட் நிறுவனத்துக்கு நான் சிஇஓ-வாக இருப்பேன். எங்கள் நிறுவனம் இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இன்னமும் மேம்படுத்தும் வகையில் ஆல்ஃபபெட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. கூகுளின் சிஇஓ-வாக இனி சுந்தர் பிச்சை செயல்படுவார். இதுதவிர புதிதாக தொடங்கப்படும் ஆல்ஃபபெட் நிறுவனத்திலும் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருக்கும்.
சென்னையில் பிறந்த இவர் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். சுந்தரின் பணி அர்ப்பணிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இத்தகைய உயர் பதவிக்கு தகுதியானவரே. அவரைப் போன்ற அறிஞர் ஒருவர் கூகுள் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கூகுள் குரோம், கூகுள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமையைப் பெற்றவர். கூகுள் ஆப்ஸ் மேம்பாட்டு துறைக்குத் தலைமை தாங்கினார். ஜி-மெயில் ஆப்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ்களை உருவாக்கியதில் இவரது பணி குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின், சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.