Published : 07 May 2020 02:12 PM
Last Updated : 07 May 2020 02:12 PM

பெருந்தொற்றுக்குப் பிறகு அலுவலகம் செல்ல விரும்புகிறீர்களா?

நியூயார்க்கின் 61 வயது ஜெஃப் ஆண்டர்ஸனைப் பொறுத்தவரை, கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பது என்பது, அலுவலகத்தில் உள்ள நகலெடுக்கும் இயந்திரம் அருகே நின்றுகொண்டு அரட்டையடிப்பது, அலுவலக அரசியல் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கச் செய்திருக்கும் விஷயம்.

ஆனால், அமெரிக்காவில் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான முஸ்தீபுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் எனும் எண்ணமே தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் ஜெஃப் ஆண்டர்ஸன். தான் ஒரு கூச்ச சுபாவி என்று சொல்லிக்கொள்ளும் இவர், நியூயார்க்கின் ஜெனீவா நகரில் உள்ள ஹோபார்ட் அண்ட் வில்லியம்ஸ் ஸ்மித் கல்லூரியின் மானுடவியல் பேராசிரியர்.

சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும்
வீட்டிலிருந்தபடி தனியாகவே வேலை பார்க்க விரும்பும் விஷயத்தைப் பொறுத்தவரை இவர் தனியர் அல்ல. கூச்ச சுபாவிகள் அல்லாத பலரும்கூட, அலுவலகம் திரும்புவது என்பதை வருத்தத்துடனும், பதற்றத்துடனும் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம், தொற்று ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் மட்டுமல்ல. பெருந்தொற்றுக் காலம் முடிந்த பின்னரும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழல் தொடர்வதை அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் விரும்புவதாக ’கேல்லப்’ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.

மீண்டும் அலுவலகம் திரும்பினால், வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பதன் மூலம் கிடைத்திருக்கும் முக்கியச் சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் ஆன்லைனில் வேலை பார்ப்பதை விரும்புபவர்களின் (சொல்லப்போனால் ஒட்டுமொத்த அமெரிக்காவின்) கவலை. அலுவலக சகாக்களுடன் புறணி பேசுவதை ஒருபோதும் விரும்பாதவர்கள், அலுவலகக் கூட்டங்கள், அரட்டைகள் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதால், தங்களுடைய உற்பத்தித் திறன் புதிய உச்சங்களை அடைந்திருப்பதாகக் கருதுகிறார்கள்.

பருவநிலை மாற்றம் குறித்த அக்கறை கொண்டவர்கள், காரில் பயணம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் கரியமில வாயு உமிழ்வின் அளவைக் குறைப்பதில் தங்கள் பங்கை நிகழ்த்துவதாகத் திருப்தியடைகிறார்கள். மீண்டும் பள்ளிகள் / குழந்தைக் காப்பகங்கள் திறக்கப்பட வேண்டும் என்று பல பெற்றோர்கள் விரும்பினாலும், பலர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைக் கழிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்காக மகிழ்கிறார்கள்.

ஆதரவும் அதிருப்தியும்
மன்ஹாட்டனில் உள்ள ‘அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினீயர்ஸ்’ எனும் அமைப்பின் மூத்த இயக்குநராகப் பணிபுரியும் கிறிஸ்டைன் ரெய்லி, “பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்னர், அலுவலகம் செல்வதற்கு அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழ வேண்டியிருந்தது. இப்போது நல்ல ஓய்வு கிடைக்கிறது. வேலையிலும் நிறைய நேரத்தைச் செலவழிக்க முடிகிறது. நேரத்தையும், பயணத்தையும் மிச்சப்படுத்த முடிகிறது என்பதால், தனிப்பட்ட முறையில் இதை நான் விரும்புகிறேன்” என்கிறார் அவர்.

மறுபுறம், வீட்டிலிருந்தபடி வேலை செய்வது நல்லது என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக்கம் என்று சிலர் விமர்சிக்கவும் தயங்கவில்லை. இது ஒயிட் காலர் வேலைகளுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதும் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயம். கட்டுமானத் துறை அல்லது சேவைத் துறைப் பணியாளர்களுக்கு இது சாத்தியமல்ல. சுகாதாரப் பணியாளர்கள், அவசரகாலப் பணியாளர்கள், பொருட்களை விநியோகிக்கும் தொழிலாளர்கள் என்று அத்தியாவசியப் பணியில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமல்ல. மார்ச் மாதம் முதல் வேலையிழந்திருக்கும் 3 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள், இன்னும் வேலையில் தொடர்ந்தபடி சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பவர்கள் இப்படியெல்லாம் சலித்துக்கொள்வது பற்றி ஆத்திரத்தில் இருக்கலாம்.

வெற்றியா, தோல்வியா?
வெறுத்துப் போயிருக்கும் குழந்தைகள், கடுப்படைந்து முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைத் துணை ஆகியோர் பின்னணியில் இருக்க சமையலறை மேஜையிலிருந்து ‘ஜூம்’ (Zoom) மூலம், ஆன்லைன் அலுவலகச் சந்திப்பில் கலந்துகொள்வது என்பது உற்பத்தித் திறனை வெளிப்படுத்த உகந்த வழி அல்ல. ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் சந்திப்பில், தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று பெண்கள் புகார் சொல்கிறார்கள். இது வேலை பார்க்கும் தாய்மார்களின் சுமைகளை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

தொலைத்தொடர்பு வசதி வழியிலான அலுவலகப் பணி என்பது, குறைந்த ஊதியம் பெறும் பல தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்றியிருக்கிறது. வீட்டிலிருந்தபடி பணிசெய்யும் தொழிலாளர்களின் பணித் திறன் குறைந்திருப்பதாகவும் பல நிறுவனங்கள் கருதுகின்றன. ஊழியர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இல்லாததால், அவர்களின் படைப்பாற்றலும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். தனித்திருந்து பணிபுரிவது என்பது, தனிமை உணர்வுக்கும், சலிப்புக்கும் வழிவகுக்கும். வீட்டிலிருந்தபடி பணிபுரிபவர்கள், வழக்கத்தைவிட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

சரி, வீட்டிலிருந்தபடி பணிசெய்வதன் பலன்கள்தான் என்ன?
“வீட்டிலிருந்தபடி பணிபுரிவது வெற்றிகரமாக அமைய வேண்டுமானால், தகுந்த சாதனங்களையும் பிற வசதிகளையும் நிறுவனங்கள் செய்துதர வேண்டும்” என்கிறார் ‘டிஸ்ட்ரிபியூட் கன்சல்டிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லாரெல் ஃபாரெர். ஊழியர்களும் மேற்பார்வை இல்லாமல் வேலைகளைச் செய்து முடிக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். இவை சரியாக அமைந்தால், வீட்டிலிருந்தபடி வேலை செய்வதில் பல்வேறு பலன்கள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பயண நேரம் குறையும்
காரில் பயணிப்பது என்பது மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு, சுவாசப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்புடையது. கார் மூலம் அலுவலகம் செல்லும் அமெரிக்கர்கள் சராசரியாக ஓராண்டுக்கு 54 மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்கிறார்கள் என்கிறது ‘டெக்ஸாஸ் ஏ அண்ட் எம் ட்ரான்ஸ்போர்ட் இன்ஸ்டிடியூட்’.

அதிக உற்பத்தித் திறன்
ஸ்டான்ஃபோர்டு பேராசிரியர் நிகோலஸ் ப்ளூம் தலைமையில், 2014-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று புகழ்பெற்றது. சீனாவைச் சேர்ந்த பயண நிறுவனம் ஒன்றின் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், வீட்டிலிருந்தபடி வேலை செய்த ஊழியர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்களை விடவும் 13 சதவீதம் அதிகத் திறனுடன் பணியாற்றியது தெரியவந்தது.

தூய்மையான சுற்றுப்புறச் சூழல்
அமெரிக்கர்கள் அனைவரும் பாதி நேரம் வீட்டிலிருந்தபடி வேலை செய்தால், ஓராண்டுக்கு வாகனங்கள் மூலம் உருவாகும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை 51 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்குக் குறைக்கலாம் என்று 'குளோபல் வொர்ப்ளேஸ் அனாலிஸிஸ்' எனும் ஆய்வு நிறுவனம் சொல்கிறது. காற்று மாசு குறைவதைக் காட்டும் வரைகலைப் படங்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் தெளிவான வானத்தைக் காட்டும் படங்கள் போன்றவை பெருந்தொற்றுக்கு நடுவே மின்னும் நம்பிக்கைக் கோடுகள்.

அதேசமயம், மக்கள் மீண்டும் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கும்போது, சாலைகள் மீண்டும் நிரம்பிவழியும். குறிப்பாக, பொதுப் போக்குவரத்து மூலம் வைரஸ் தொற்று ஏற்படலாம் எனும் அச்சம் மக்களிடம் ஏற்பட்டால் (பலரும் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால்) போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரிக்கலாம்.

செலவு மிச்சம்
வீட்டிலிருந்து வேலை பார்ப்பதன் மூலம், எரிபொருளுக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் செலவழிக்கும் தொகையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2,000 டாலர் முதல் 6,500 டாலர் வரை மிச்சப்படுத்தலாம் என்று 'குளோபல் வொர்க்ப்ளேஸ் அனாலிட்டிக்ஸ்' நிறுவனம் கணித்திருக்கிறது. நிறுவனங்களும் நிலம், கட்டிடம் போன்றவற்றுக்கான செலவைக் குறைக்க முடியும். 2015-ல், தனது அலுவலகக் கட்டிடங்களை அதிகம் பயன்படுத்தாததன் மூலம், 38 மில்லியன் டாலர்களை, அமெரிக்காவின் காப்புரிமை மற்றும் ட்ரேட்மார்க் அலுவலகம் மிச்சப்படுத்தியிருப்பதாக, ‘ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல்’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேலையில் அதிக திருப்தி
வீட்டிலிருந்தபடி வேலை செய்பவர்கள், கூடுதலான ஒவ்வொரு மணிநேரமும் வேலையில் திருப்தி அடைவதாக 2005-ல், வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனினும், 15 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்தபோது அதில் தேக்கநிலை இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
அலுவலகத்துக்கு வராமல், வீட்டிலிருந்தபடி வேலை செய்வதால், கரோனா வைரஸ் தொற்று மட்டுமல்ல வேறு எந்தத் தொற்றும் ஊழியர்களுக்கு ஏற்படாத சூழல் உருவாகும். ஊழியர்கள் உடற்பயிற்சி செய்யவும் அதிக நேரம் கிடைக்கும்.

பொதுமுடக்கம் போன்ற தடைகள் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய 60 சதவீத அமெரிக்கர்கள் விரும்புவதாக ‘கேல்லப்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மொத்தத்தில், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் கிடைத்திருக்கும் பாடத்தின் அடிப்படையில், இன்னும் இணக்கமான அணுகுமுறையுடன் நிறுவனங்கள் தங்களை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள் விரும்புகிறார்கள்.

- மரியா க்ரேமர் மற்றும் மிஹிர் ஸவேரி, நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x