

அமெரிக்க பெரு நிறுவனங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் பணியிலமர்த்திய வெளிநாட்டு பணியாளர்களுக்கு உள்நாட்டினரை விட குறைந்த ஊதிய வழங்குவது தெரியவந்துள்ளது.
இது குறித்து அமெரிக்கப் பொருளாதாரக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் 30 முன்னணி நிறுவனங்களில் அமேசான், பேஸ்புக், மைக்ரோசாப்ட், வால்மார்ட், கூகுள், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகியவை உள்ளன. இந்த நிறுவனங்கள் உள்நாட்டு பணியாளர்களைக் காட்டிலும் ஹெச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் அளித்து வருகின்றன.
2019-ல் ஹெச்1பி விசா மூலம் வேலையில் அமர்த்த 53,000 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் அமேசான், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 30 முன்னணி நிறுவனங்கள் நான்கில் ஒரு பங்கு பணியாளர்களை நியமித்துள்ளன. இதில் அதிகப்படியான ஊழியர்கள் குறைந்த ஊதியம் உள்ள நிலை ஒன்று மற்றும் நிலை இரண்டு பிரிவின் கீழ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை எச்1பி விசாவுக்கு தகுதியான பணிகளை வரையறுத்து அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்துள்ளது. இதில் 60% -க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உள்நாட்டு ஊழியர்களை விடவும் குறைந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எச்1பி திட்ட விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இதை தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மாற்றலாம் ஆனால் ட்ரம்ப் நிர்வாகம் இதை மாற்றவில்லை.
ஹெச்1பி விசாவின் கீழ் சுமார் 5 லட்சம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். ஊபர் நிறுவனமும் குறைந்த ஊதியத்தையே வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கு கிறது.
ஹெச்1பி விசா மூலம் ஊழியர்களை நியமிக்கும் டாப் 30 நிறுவனங்கள் லெவல் 1 மற்றும் லெவல் 2 இடங்களுக்கு அதிகம் பேர்களை நியமிக்கின்றன, இதற்கு குறைந்த அனுபவமும் சாதாரன திறமையும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.