

பாகிஸ்தானில் கரோனா வைரஸுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 40 பேர் பலியாகினர்.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 40 பேர் பலியாகினர். இது கரோனா தொற்றுக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும். மேலும் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,049 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுட்டத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22, 413 ஆக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் சுமார் 8, 420 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பாகிஸ்தானில் 2,32,582 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பாகிஸ்தானில் மெல்ல, மெல்ல ஊரடங்கு தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கரோனா தொற்றில் 75% சமூகப் பரவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.