

கிழக்கு ரஷ்யாவின் சாக்ஹாலின் தீவில் புகசேவ்ஸ்கி எரிமலை இருக்கிறது. சமீபத்தில் எரிமலை வெடித்தது. அதிலிருந்து பீறிட்டு குழம்பு வெளியேறியது. புகைப்படக்காரர் மிகைல் மிகைலோவ் புகைப்படங்கள் எடுக்கச் சென்றார். ஹெலிகாப்டரில் இருந்து பார்த்தபோது எரிமலைக் குழம்பு மனிதக் கண் போன்று இருந்தது கண்டு ஆச்சரியமடைந்து போனார்.
‘‘இது போன்ற ஒரு காட்சியை நான் இதுவரை கண்டதில்லை. உலகில் உள்ள எந்த எரிமலைக் குழம்பும் இதுபோன்று இருந்ததில்லை. மிகப் பெரிய எரிமலை வெடிப்பு. இன்னும் கூட குழம்பு வெளி வந்துகொண்டிருக்கிறது. பிரமிப்பு அகலவில்லை. ஒரு புகைப்படக்காரராக இருப்பதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது’’ என்கிறார் மிகைல்.
ஆச்சரியங்களைத் தந்துகொண்டே இருக்கிறது இயற்கை!
சீனாவில் வசிக்கும் 5 வயது சிறுமி ஹான் ஜியாயிங் விலங்குகளை ஹிப்னாடிசம் செய்கிறார். பல்லி, முயல், கோழி, நாய், தவளை போன்ற விலங்குகளிடம் குரல் மூலமும் கைகளால் தடவிக் கொடுப்பதன் மூலமும் உறக்கத்தில் ஆழ்த்திவிடுகிறார். சீனத் தொலைக்காட்சியில் ஹான் ஜியாயிங் தன்னுடைய திறமையை எல்லோருக்கும் முன்பாக வெளிப்படுத்தினார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்த ஒவ்வொரு விலங்கையும் வெளியே கொண்டு வந்து, ஒரு சில நிமிடங்களில் அப்படியே தூங்க வைத்து விடுகிறார். 5 விலங்குகளையும் தூங்க வைத்த பிறகு கைகளை உயர்த்தினார்.
அரங்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலர் பள்ளியில் ஒருநாள் ஹான் ஜியாயிங் தவளையைப் பிடித்தார். விளையாட்டாக அந்தத் தவளையிடம் பேசிக்கொண்டே, தடவிக் கொடுத்தார். உடனே அது உறங்க ஆரம்பித்துவிட்டது. அதைப் பார்த்து ஒவ்வொரு விலங்கையும் அதே போலச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதாவது தான் ஹிப்னாடிசம் செய்கிறோம் என்பதை அறியாமலே செய்துகொண்டிருந்தார். அவரது பெற்றோர் ஹான் ஜியாயிங் திறமையை அறிந்துகொண்டு, ஊக்குவித்தனர். இன்று விலங்குகளை ஹிப்னாடிசம் செய்வதில் தனித் திறமையுடன் இருக்கிறார் ஹான் ஜியாயிங். கடந்த வாரம் வெளியான வீடியோவை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.
கீர்த்தி பெரிது!
ஒரு சிறிய விஷயத்தின் மூலம் தொழிலதிபராகிவிட்டார் டெக்சாஸைச் சேர்ந்த அலெக்ஸ் க்ரைக். பெரிய உருளைக் கிழங்குகளில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு செய்தி எழுதி அனுப்புவதுதான் இவருடைய தொழில். அலெக்ஸ் தன் காதலியிடம் இந்த யோசனையைச் சொன்னபோது, முட்டாள்தனமான யோசனை என்று நிராகரித்துவிட்டார்.
ஆனால் அலெக்ஸ் விடுவதாக இல்லை. கடந்த மே மாதம் இந்தத் தொழிலை ஆரம்பித்தார். ஒரே மாதத்தில் 20 ஆயிரம் உருளைக் கிழங்குகளை அனுப்பிவிட்டார். 6.5 லட்சம் ரூபாயைச் சம்பாதித்து விட்டார். இரண்டே மாதத்தில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என்று தன் தொழிலை விரிவுபடுத்தியும் விட்டார்.
வல்லவருக்கு உருளைக்கிழங்கும் தொழில்…
சீனாவின் ஹன்பின் மாவட்டத்தில் உள்ள அன்காங் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலோர் நடந்து செல்பவர்கள். போக்குவரத்து காவலர்கள் எவ்வளவோ முயன்றும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விதிமீறல்கள் செய்வோருக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டு, போக்குவரத்து காவலர்களுக்கு அபராதம் விதிக்க ஆரம்பித்துவிட்டது போக்குவரத்து துறை. விதிகளை மதிக்காமல் சாலையைக் கடப்பவர்கள் மூலம் சுமார் 56 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும்.
அப்படி வசூலிக்காவிட்டால் போக்குவரத்து காவலர்களின் சம்பளத்தில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும் ஓவர் டைம் வருமானத்தில் 5 ஆயிரம் ரூபாயும் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்திருக்கிறது. இப்படிச் செய்வதால் 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊழியர்கள் சம்பளமாகப் பெற முடியும். காவலர்கள் கவனமாகக் கண்காணித்து விதிமீறுபவர்களிடம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதுக்கெல்லாம் சீனர்கள் நம்ம ஊரில் பாடம் கத்துக்கணும்!