கரோனா வைரஸ் தொடர்பாக சீனா பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Updated on
2 min read

சீனா கரனோ வைரஸ் தொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் வாலஸ் கூறும்போது, ”நாம் இயல்பு நிலைக்கு வந்தப் பிறகு கரோனா வைரஸ் பரவல் குறித்து தீவிரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். எப்படி சீனா இந்த வைரஸை முதலில் கண்டறிந்து, எவ்வாறு கட்டுப்படுத்தியது உள்ளிட்ட விவரங்கள் அறியப்பட வேண்டும். அனைத்துக்கும் சீனா வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. ஹூபே மற்றும் அதன் தலைநகர் வுஹான் ஆகிய இடங்களில் தொற்று அதிகமானது. அதைத் தொடர்ந்து அப்பகுதிகள் முடக்கப்பட்டன. விரைவிலேயே கரோனா தொற்று சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கும் பரவியது. தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில், கரோனா பரவலுக்கு சீனாதான் முக்கியம் காரணம் என்றும், அங்கு எவ்வாறு வைரஸ் தோன்றியது குறித்தை விவரங்களை சீனா அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியது.

அமெரிக்காவில் காரோனா மிகத் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கரோனா வைரஸ் வெளியேறி இருக்கக்கூடும் என்று டிரம்ப் குற்றம்சாட்டினார் சமீபத்தின் டிரம்ப் அரசின் செயலர் மைக் பாம்பே, சீனா கரோனா விசயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

”சீனாதற்போதைய சூழலில் மிகுந்த பொறுப்புடனும் நம்பகத் தன்மையுடன் செயல்பட வேண்டும். எப்படி சீனாவில் வைரஸ் பரவல் நிகழ்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். அதுவே இனி அவ்வாறு ஒரு நிகழ்வு நடைபெறாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அமையும். சீனாவில் என்ன நடந்தது என்பதை அறிய உலக நாடுகளுக்கு உரிமை இருக்கிறது” என்று பாம்பியோ கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரிட்டன், சீன பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளது.

சீன தூதர் லியு சியாமிங் விமர்சனம்

கரோனா பரவலுக்கு பல நாடுகள் சீனாவை குற்றம் சுமத்தி வந்தநிலையில், ”சீனா அரசு கரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவலை தெரிவித்து இருப்பதாகவும், ஏதோவொன்று மறைப்பதாகவும் தகவல் பரவி வருகின்றன. அவை எதுவும் உண்மையில்லை. சீனா அரசு கரோனா தொடர்பாக மிக வெளிப்படையாக நடந்து கொண்டு வருகிறது. முறையான தகவலை உடனுக்குடன் வழங்கி வந்தது. சில நாடுகள், அதன் நீதிமன்றங்கள் சீனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளன. இது அர்த்தமற்றது.

சில அரசியல்வாதிகள், சில தனிமனிதர்கள் உலகத்தின் காவலாளிபோல் சீனாவை அணுகின்றனர். அவர்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது சீனா காலானிய காலகட்டத்திலோ, நிலபிபுவத்துவ காலகட்டத்திலோ இருந்தது இப்போது இல்லை. அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சமீபத்தில் சீனத் தூதர் லியு சியாமிங் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in