

‘‘கரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ள அமெரிக்க பொருளாதாரம் விரைவிலேயே மீளும், அமெரிக்க மேஜிக் மீண்டும் நிகழும்’’ என்று பங்குச் சந்தை கோடீஸ்வரர் வாரன் பஃபெட் கூறியுள்ளார்.
தற்போது 89 வயதாகும் வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனமான பெர்க் ஷயர் ஹாத்வேநிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5,000 கோடி டாலர் நிகர நஷ்டத்தை சந்தித்தது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் என்று கணித்ததால் கடந்த மாதமேஅனைத்து ஏர்லைன்ஸ் பங்குகளையும் விற்று விட்டதாக பஃபெட் தெரிவித்துள்ளார். அவ்விதம் விற்பனை செய்ததால் நான் தவறாக முடிவு எடுத்துவிட்டதாகத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஏர்லைன்ஸ், டெல்டாஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்தது.
இந்த நடவடிக்கையால் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்துக்கு 700 கோடி டாலர் முதல் 800 கோடிடாலர் வரை கிடைத்தது. இதுபோன்று வேறு எந்த சமயத்திலும் இவ்வளவு அதிகமாக பங்குகளை விற்பனை செய்தது இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பங்குகளை வாங்குவதற்கு பல மாதங்கள் ஆனது. இனி வரும்காலங்களில் ஏர்லைன்ஸ் தொழில்மிகப் பெரிய அளவில் மாற்றமடையும். எனினும் பெர்க் ஷயர் ஹாத்வே நிர்ணயித்துள்ள லாப இலக்குகளை எட்டுவதற்கு அது போதுமானதாக இருக்காது என்பதால் விற்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றார் பஃபெட்.
ஏர்லைன்ஸ் பங்குகளை விற்கும் முடிவை பஃபெட் எடுத்த பிறகு கரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்துறை கடும் நெருக்கடிக்கு ஆளானது. தற்போது அமெரிக்க அரசிடம் 2,500 கோடி நிவாரண உதவி கோரியுள்ளது இத்துறை.
இதற்கு முன்பு பங்குச் சந்தை முதலீடுகளில் பல்வேறு விதமான பிரச்சினைகளை தனது நிறுவனம் எதிர்கொண்டு வந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளதைப் போல பிரச்சினை உருவானதில்லை என்று பஃபெட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மிகவும் நெருக்கடியான கால கட்டத்தை எதிர்கொண்டுள்ளோம். மேஜிக் மற்றும் அற்புதங்களை அமெரிக்காவின் பொருளாதாரம் நிச்சயம் நிகழ்த்தும். அது மறுபடியும் நிகழும் என்றார்.
அமெரிக்கா மிகவும் வசதி படைத்த நாடு. கடந்த 1789-ம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழலைவிட மிகவும் செழிப்பாக உள்ளோம். அமெரிக்கா மிகவும் சரியான பாதையில் பயணிக்கிறது. அடிமைத் தளையை ஒழித்தது, பெண்களுக்குசுதந்திரம் அளித்தது போன்ற பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை நிறுவனமாக பஃபெட்டின் பெர்க் ஷயர் திகழ்கிறது. இவரது நிறுவனத்தின் மதிப்பு 7,200 கோடி டாலராகும். இது உலகில் நான்காவது பெரிய நிறுவனமாகும் என்று ஃபோர்ப்ஸ் கணித்துள்ளது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் முதலீட்டாளர் கூட்டம் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தற்போது கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பங்குச் சந்தை சரிவு பஃபெட் நிறுவனத்தையும் வெகுவாக பாதித்துள்ளது.
ஹாத்வே நஷ்டம் 5,000 கோடி டாலர்
கரோனா வைரஸ் பரவலால் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதால் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனமான வாரன் பஃபெட்டின் பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனம் 5,000 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. எனினும் நிறுவனத்தின் நிர்வாக லாபம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் காலாண்டு நஷ்டம் 4,975 கோடி டாலராகும். அதாவது முதலீடுகளால் ஏற்பட்ட நஷ்டம் 5,452 கோடி டாலர். நிர்வாக லாபம் 6 சதவீதம் உயர்ந்து 587 கோடி டாலரை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.