

கரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், ஜெர்மனியில் அரசு விளையாட்டு மைதானங்கள், தேவாலயங்கள், அருங்காட்சியகம் போன்ற கலாச்சார மையங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதியளித்துள்ளது. அதேசமயம் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றை திறப்பது குறித்த முடிவை ஒத்தி வைத்துள்ளது.
8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில், 1,62,000 பேர் அளவில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். 6,467 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியின் தொற்று எண்ணிக்கை இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தொற்று எண்ணிக்கைக்கு நிகராக இருந்தாலும், இறப்பு விகிதம் அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. இங்கிலாந்தில் 1,71,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 26,771 பேர் இறந்துள்ளனர். அதேபோல், பிரான்ஸில் 1,30,000 பேர் அளவில் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 24,376 பேர் பலியாகி உள்ளனர். இவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனின் இறப்பு விகிதம் கால் பங்கு அளவிலே உள்ளது.
16 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஜெர்மனி கூட்டாச்சி முறையில் செயல்பட்டு வருகிறது. அந்தந்தப் பிராந்திய ஆளுநர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை ஜெர்மனி கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
முந்தைய வாரங்களில் தினமும் சராசரியாக 2000 பேர் அளவில் தொற்று உறுதியாகி வந்தநிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1,500 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், தொடந்து சுகாதார ரீதியான வழிமுறைகள் மிகத் தீவிரமாக பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை பொறுப்புடன் எதிர்கொள்ளும் ஜெர்மனி
நோய் தடுப்பு மட்டுமல்ல, பொருளாதார ரீதியான நெருக்கடியையும் ஜெர்மனி மிகுந்த பொறுப்புடனும் திட்டமிடலுடன் எதிர்கொண்டு வருகிறது. பிற ஜரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கரோனா வைரஸால் தொழில் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் நிறுவனங்கள் அதன் ஊழியர்களை அதிக அளவில் வேலை நீக்கம் செய்து வருகின்றன. அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் பெரிய அளவில் வேலைநீக்கம் செய்யப்பட வில்லை. நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யாமல் இருப்பதற்காக ஜெர்மனி அரசு அந்நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
இருந்தபோதிலும், ஊரடங்கால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் வேலையின்மை 3,08,000 உயர்ந்து 26 லட்சமாக உள்ளது. ஜெர்மனியில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 5.1 சதவீதமாக இருந்த நிலையில் ஏப்ரலில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நோய்ப் பரவலை முழுக் கட்டுக்குள் கொண்டுவர விளையாட்டு நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள், திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் 31 வரை தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.