

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அதிபர் விளாதிமிர் புதினுக்கு தகவல் தெரிவி்த்தார்
ரஷ்யாவில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் உலகளவில் 2-வது அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் காணொலி மூலம் கூறுகையில், “ எனக்கு கரோனா பாஸிட்டிவ் என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை நான் அதிபர் புதினுக்கு தெரிவித்துவி்ட்டேன். என்னை தனிமைப்படுத்திக்கொண்டாலும், முக்கிய கொள்கை முடிவுகளில் அதிகாரிகளுடன் தொடர்ந்துதொடர்பில் இருப்பேன். என்னுடைய பணிகளை தற்காலிகமாக துணைப் பிரதமர் ஆன்ட்ரி பெலுசோவ் கவனிப்பார்” எனத் தெரிவித்தார்
54 வயதாகும் மிஷுஸ்டின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் விரைவில் உடல்நலம் குணமடைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்துத்தெரிவித்துள்ளார். அவரின் செய்தியில் “ ரஷ்ய பிரதமர் மிகைல் விரைவில் குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். ரஷ்ய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பணிகளி்லும், கொள்கைகளை உருவாக்குவதிலும் தொடர்ந்து ஈடுபடுவார் என நம்புகிறேன்.
உங்களுக்கே கரோனா வைரஸ் பாதிப்பு என்றால்யாருக்கு வேண்டுமானாலும் தாக்கலாம். உங்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை யாருடனும் நேரடியாகப் பேசாமல் காணொலி மூலம் ஆலோசனை நடத்துங்கள்.” என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மிகைஸ் மிஷூஸ்டின் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், “ நானும்கூட கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதால், மக்கள் அனைவரின் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, லாக்டவுனை மதித்து நடக்க வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வாறு கட்டுப்பாட்டுடன், ஒழக்கமாக நடக்கிறோமோ அதைப் பொறுத்து விரைவாக இயல்புவாழ்க்கைக்கு திரும்ப முடியும்” எனத் தெரிவித்துள்ளார்
ரஷ்யாவில் இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,073 பேர் இதுவைர உயிரிழந்துள்ளனர்.