

மாலத்தீவில் கரோனா வைரஸுக்கு முதல் மரணம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ''தலைநகர் மாலியில் கரோனா பாதிப்பால் 83 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். இதன் மூலம் மாலத்தீவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் சுற்றுலாத் தளங்களில்தான் முதல் முதலில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை சமூகத் தொற்று பரவவில்லை என்றும் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 280 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 32,20,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,28,239 பேர் பலியாகியுள்ளனர். 10,00,983 பேர் குணமடைந்துள்ளனர்.