தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று: புதிய பரிசோதனை முறையை மேற்கொள்ளும் சிங்கப்பூர்

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று: புதிய பரிசோதனை முறையை மேற்கொள்ளும் சிங்கப்பூர்
Updated on
1 min read

சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 528 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,169 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருப்பவர்கள் 6 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் குறைந்த ஊதிய வேலைகளைச் செய்து வருகின்றனர். இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். போதிய சுகாதார வசதியின்மையால் அவர்களிடையே கரோனா தொற்று அதிகமாக உள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் நோய்த் தொற்றைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

புதிய பரிசோதனை

நோய்த் தொற்றைக் கண்டறிய புதிய பரிசோதனை முறையை சிங்கப்பூர் அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. கரோனா அறிகுறி வெளிப்படாமலே பலருக்கும் கரோனா தொற்று இருக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியாவதும் இல்லை. இந்நிலையில் மிகத் துல்லியமான நவீன பரிசோதனை முறையை பெரிய அளவில் நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுதி வாரியாக எத்தனை பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது கண்டறியப்படும். அதனை அடிப்படையாகக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பாக ஆரம்பம் முதலே திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் சிங்கப்பூர் அரசு, தற்போது கரோனா பரிசோதனை முறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உலக அளவில் இத்தகைய நவீன பரிசோதனையை சிங்கப்பூர் அரசுதான் முதன் முதலாக பெரிய எண்ணிக்கையில் மேற்கொள்ள இருக்கிறது.

சிங்கப்பூரில் இதுவரையில் 16,169 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,188 பேர் குணமாகிய நிலையில் 14 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in