

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,478 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதுகுறித்து ஜெர்மனியின் தொற்று நோய்த் தடுப்பு மையம், “ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 1,478 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,119 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஜெர்மனியில் கரோனா தொற்றுக்கு 6,288 பேர் பலியாகியுள்ளனர். 1,20,400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனி ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் மே மற்றும் ஜூன் மாதங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஜெர்மனி கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கப்போகிறது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில நாட்களுக்கு முன்னர் தெரிவிந்தார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 32,20,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,28,239 பேர் பலியாகியுள்ளனர். 10,00,983 பேர் குணமடைந்துள்ளனர்.