

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,841 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “நிலப்பரப்பு அடிப்படையில் பெரிய நாடான ரஷ்யா, உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 8-வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் சீனா மற்றும் ஈரானைவிட ரஷ்யாவில் கரோனா தொற்று அதிகரித்திருக்கிறது.
அவ்விரு நாடுகளுடன் ஒப்பிடுகையில், கரோனாவிலிருந்து குணமடைந்துவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் மிகக் குறைவாக உள்ளது. சீனாவில் 84,347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 77,578 பேர் குணமடைந்துள்ளனர். ஈரானில் 92,584 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 72,439 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால், ரஷ்யாவில் 99,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,286 பேர் மட்டுமே குணமாகியுள்ளனர். அதேசமயம் அந்நாடுகளைவிட ரஷ்யாவில் இறப்பு விகிதம் சற்று குறைவாக உள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 108 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 31,39,471 பேர் பாதிக்கப்பட, 2,18,024 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 9,59,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.