

சிரியாவில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டை அந்நாடு தளர்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடைகள், தொழில் நிறுவனங்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றைத் திறக்க சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அனுமதி வழங்கியுள்ளார். அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடு இரவு நேரங்களில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து சிரியா கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியது. போர்ச் சூழலால் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை எதிர்கொண்டுவருகிற நிலையில், தற்போதைய ஊரடங்கால் கூடுதல் நெருக்கடியை சிரியா சந்தித்தது.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கின. அன்றாடத் தொழிலாளிகள் வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை இரவில் தொடரச் செய்து பகலில் தளர்த்தும் முடிவை சிரியா எடுத்துள்ளது.
தற்போதைய ஊரடங்கால் நடுத்தர வர்த்தகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். ரமலான் மாதத்தில்தான் அவர்களால் குறிப்பிட்ட அளவில் வருமானம் ஈட்ட முடியும். அதனைக் கருத்தில் கொண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பதாக சிரிய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது,
கடைகள், தொழில் நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பொதுச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் இதுவரையில் 43 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.