

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இயலாது என்று ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் விளையாட்டு வீரர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு அமைப்புகளும்,
முன்னணித் தடகள வீரர்களும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே பதில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹின்சே அபே கூறும்போது, “ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் முழுமையாக நடத்தப்பட வேண்டும். அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உணர வேண்டியது அவசியம். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாத வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பால் 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 394 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 31,39,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,18,024 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 9,59,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.