

ஈரானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் விஷச் சாராயம் குடித்ததில் 700 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், “ஈரானில் கடந்த இரு மாதங்களாக விஷச் சாராயம் குடித்ததில் 700க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். கரோனா தொற்று பரவாது என்று எண்ணி அவர்கள் அதனை அருந்தியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 66 பேர் மட்டுமே ஈரானில் விஷச் சாராயம் குடித்ததில் பலியான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஈரானில் கடந்த 10 ஆண்டுகளாக விஷச் சாராயம் குடித்துப் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பெரும் சரிவை எதிர் கொண்டுள்ள ஈரான் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
ஈரானில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 92,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,877 பேர் பலியாகியுள்ளனர். 72,439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 31,39,471 பேர் பாதிக்கப்பட, 2,18,024 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 9, 59,212 பேர்குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.