

கரோனா வைரஸால் முடங்கியுள்ள சிறு தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சிறு தொழில் செய்பவபவர்கள் 62,000 டாலர் வரையில் கடன் பெற்றுக்கொள்ளலாம். முதல் 12 மாதங்களுக்கான வட்டியை அரசு செலுத்தும்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் அந்நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில் புதிய கடன் வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு தற்போது அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் நடைமுறைக்கு வர இருக்கும் இந்தத் திட்டத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். சிறு நிறுவனங்கள் சிக்கல் ஏதுமின்றி மிக எளிமையான முறையில் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே இங்கிலாந்து அரசு கரோனாவால் பாதிப்புக்குள்ளான தொழில்களுக்கென்று கடன் திட்டத்தை மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தியது. ஆனால் அது சிறு, குறு நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து தொழில்கள் அமைப்பான ‘நிறுவனங்களின் இயக்குநர்கள்’ குழு தொடர்ந்து சிறு, குறு நிறுவனங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்க அரசு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் அனைத்து சிறு, குறு நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.