Published : 28 Apr 2020 08:05 PM
Last Updated : 28 Apr 2020 08:05 PM

பெருந்தொற்றுகளுக்கும் உணவுப் பாதுகாப்பின்மைக்கும் உணவு இறையாண்மையே தீர்வு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருக்கும் முடக்கத்தால், சிறிய அளவில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள்கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடல், ஏரிகள், குளங்களில் அவர்களால் மீன் பிடிக்க முடிந்தாலும், அவற்றை விநியோகிப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் முதல், பால் பண்ணை வைத்திருக்கும் குடும்பங்கள் வரை இதுதான் நிலைமை.

சிறிய அளவில் கால்நடைப் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளும், விவசாய வேலைகளுக்குக் கால்நடைகளைப் பயன்படுத்தும் வேளாண் குடும்பங்களும் அவற்றுக்குத் தீவனம் அளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

சிறிய அளவில் நடக்கும் உணவு உற்பத்தி மட்டுமல்ல; சர்வதேச விநியோகச் சங்கிலியைச் சார்ந்திருக்கும் பெருமளவிலான உணவு உற்பத்தித் துறையும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. பயணத் தடைகள் காரணமாக, தொழிலாளர்களின் போக்குவரத்து முதல் சர்வதேச விநியோகம் வரை எல்லாமே பாதிக்கப்பட்டிருக்கின்றன.

வேடிக்கை பார்க்கும் அரசுகள்
உண்மையில், பல நாடுகள் பெரிய அளவிலான சர்வதேச உணவு நிறுவனங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலையை நோக்கி நகரும் அவலத்தை இந்தப் பெருந்தொற்று எடுத்துக்காட்டியிருக்கிறது. பல தசாப்தங்களாக, முறையற்று இயங்கும் பெருநிறுவனங்களால் தொழிலைவிட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும் சிறிய பண்ணை விவசாயிகளையும், உணவு உற்பத்தியாளர்களையும் பாதுகாக்க அரசுகள் எதையுமே செய்யவில்லை.

தங்கள் விளைபொருட்களை மிகக் குறைந்த விலைக்கு விற்குமாறு உள்ளூர் உணவு உற்பத்தியாளர்களை நிர்பந்திக்கின்ற பெரிய விநியோகஸ்தர்களைப் பல நாடுகள் சார்ந்திருப்பதுதான் இதற்குக் காரணம். இதன் மூலம், பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்தைப் பல மடங்கு பெருக்கிக்கொள்கின்றன. பசுங்குடில் வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் போன்ற பிரச்சினைகளுக்கு, இப்படியான பெருநிறுவனங்கள்தான் அதிக அளவில் காரணமாக இருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும், அரசுகள் அமைதி காக்கவே செய்கின்றன.

இன்றைக்கு உள்ளூர் விவசாயச் சந்தைகளின் இடத்தை சூப்பர் மார்க்கெட்டுகள் பிடித்துவிட்டன. பெரிய நிறுவனங்களும், அவற்றின் வர்த்தகக் கூட்டு நிறுவனங்களும் உலகளாவிய உணவு அமைப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டன. மேலும், வேளாண் அறிவியல் மற்றும் உணவு இறையாண்மை ஆகியவற்றின் கொள்கைகளையும் அவை புறந்தள்ளுகின்றன.

அடுக்கடுக்கான தீங்குகள்
தொழில்துறைசார் உணவு உற்பத்தி தீவிரமாக விரிவுபடுத்தப்படுவதும், மனிதர்களின் ஆரோக்கியத்துக்குக் கடுமையாகத் தீங்கிழைக்கிறது. இப்படியான அதீத உற்பத்தியானது, விவசாயத்தில் ரசாயனப் பொருட்களின் அதீதப் பயன்பாடு, உணவுப் பொருட்கள் அதிக அளவில் பதப்படுத்தப்படுவது போன்றவற்றுக்குக் காரணமாகிறது. இது உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து குறைய வழிவகுப்பதுடன், ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் கோவிட்-19 போன்ற நோய்கள் பெருகவும் இது வழிவகுக்கிறது.

இன்றைக்கு, பல நாடுகளில் உணவுப் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தித் தொழில் துறையுடன் பெருமளவில் பிணைக்கப்பட்டிருக்கிறது. தனது நாட்டின் உணவுப் பொருட்களில் 90 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் சிங்கப்பூர் இதற்கு ஓர் உதாரணம். மத்தியக் கிழக்கு நாடுகளின் உணவுக் கூடையாக விளங்கிவந்த இராக்கும், தனது உணவில் 80 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்தே பெறுகிறது.

இன்றைக்கு உலகின் பல பகுதிகள் பட்டினியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச உணவு விநியோகச் சங்கிலியைச் சார்ந்திருக்கும் இந்தச் சூழலின் ஆபத்துகள், முன்பைவிட மிகத் தெளிவாகத் தெரிகின்றன. உலக அளவில் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று உலக வர்த்தக அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் ஏற்கெனவே எச்சரித்திருக்கின்றன.

உணவு இறையாண்மையின் முக்கியத்துவம்
மக்கள் தங்கள் உணவையும், விவசாய முறைகளையும் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை, தத்தமது கலாச்சாரம் சார்ந்த, ஆரோக்கியமான உணவுகளை உற்பத்தி செய்யும் உரிமை ஆகியவையே உணவு இறையாண்மை எனப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பரவிவரும் இன்றைய சூழலானது, உணவு இறையாண்மையின் முக்கியத்துவத்தையும், அதன் அவசரத் தேவையையும் உணரச் செய்திருக்கிறது.

நேபாளம், மாலி, வெனிசுலா போன்ற பல நாடுகள், ஏற்கெனவே உணவு இறையாண்மையைத் தங்கள் மக்களின் அரசியல் சாசன உரிமையாக அங்கீகரித்திருக்கின்றன. பிற நாடுகளும் அப்பட்டியலில் சேர வேண்டும். எந்தவிதமான பொருளாதார அதிர்ச்சியையும் எதிர்கொள்ள, உணவு இறையாண்மைதான் மக்களுக்கான மிகச் சிறந்த ஆயுதம்.

அந்தந்த நாடுகளின் பருவநிலைக்கு உகந்த, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மக்கள் பெற வேண்டியதன் அவசரத் தேவையை உணவு இறையாண்மை உணர்த்துகிறது. உள்ளூரிலும், அருகில் உள்ள பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அவற்றை உற்பத்தி செய்வது யார் என்று மக்களால் அறிந்துகொள்ள முடியும். இந்தச் சூழல், ஆபத்தை விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்கச் செய்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் வலைப்பின்னல், சர்வதேச வணிகத்தை வரையறுப்பது நிறுத்தப்பட வேண்டும். ஒற்றுமை, நல்லுறவு ஆகிய மனித நியமங்களே, உலக வர்த்தகக் கொள்கைகளையும் வலைப்பின்னல்களையும் தீர்மானிக்க வேண்டும். பருவநிலை உள்ளிட்ட காரணிகளால் கடும் சவால்களைச் சந்திக்கின்ற, உள்ளூர் உற்பத்திக்கே வழியில்லாத நாடுகளில் வர்த்தகமானது போட்டியைச் சார்ந்ததாக அல்லாமல், கூட்டுறவைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அதனால்தான், சுதந்திர வர்த்தகம் தொடர்பான எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் வெளியே விவசாயத்தை வைத்திருக்க வேண்டும் என்று ‘லா வியா காம்பெசினா’ (La Via Campesina) போன்ற விவசாய இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லாபங்களை விடவும், உயிர்களுக்கே முக்கியத்துவம் என்பதை முன்னிறுத்தும் அம்சங்களே, மனித நாகரிகத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். இன்றைக்கு அப்படியான ஒரு சூழலில் உலகம் இல்லை. ஆனால், நிச்சயம் அந்தச் சூழலை நாம் எட்ட முடியும்.

இன்றைக்குப் பெருந்தொற்றால் உலகம் வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில், உணவு இறையாண்மையையும், ஒற்றுமையையும் கைக்கொள்கின்ற சமத்துவமான, தாராளச் சிந்தனை கொண்ட சமூகத்தைக் கட்டமைக்க வேண்டியது மிக மிக அவசியம்.

- ஜியோங்கியோல் கிம், ப்ரமேஷ் போக்ரேல்
நன்றி: அல் ஜஸீரா (கத்தார் ஊடகம்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x