

கரோனா வைரஸின் பிறப்பிடமாக இருந்த சீனாவின் வூஹான் நகரில் நேற்றுடன் கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்தார். அவர் மகிழ்ச்சியுடன் மருத்துவர்களால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கரோனா நோயாளிகளால் நிரம்பியிருந்த வூஹான் நகரம் இப்போது கரோனா நோயாளிகள் இல்லாத நகராக மாறிவிட்டது. இதை அந்நகர மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதுவரை 193 நாடுகளை ஆட்டுவித்து வரும் கரோனா வைரஸைச் சமாளிக்க முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. கரோனாவால் இன்று உலக அளவில் ஏறக்குறைய 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவுக்குக் காரணமான சீனாவில் இதுவரை 82,230 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கரோனா வைரஸின் பிறப்பிடமாக இருந்த வூஹான் நகரில் நேற்றிலிருந்து கரோனா நோயாளி இல்லாத நகரமாக மாறிவிட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளிக்கும் ரத்தப் பரிசோதனை நெகடிவாக வந்ததால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “வூஹான் நகரில் எந்தக் கரோனா நோயாளியும் இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். ஒருவர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். இன்னும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் 723 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 77,474 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவர்கள், செவிலியர்களின் கடின உழைப்பால் வூஹான் நகரம் கரோனா நோயாளிகள் இல்லாத நகரமாக மாறிவிட்டது. 77 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது” எனத் தெரிவித்துள்ளது.
வூஹான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் சாங் யூ கூறுகையில், “இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம். ஏறக்குறைய கடந்த 70 நாட்களுக்குள்ளாக நோயாளிகள் எண்ணிக்கையை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு வந்து, கடைசி 5 நாட்களில் தீவிரமாகப் பணியாற்றி நோயாளிகளை அனுப்பிவிட்டோம்.
இருப்பினும் பல்வேறு நகரங்களில் கரோனா நோயாளிகள் வந்துகொண்டிருந்தாலும் வூஹான் நகரில் இப்போது யாரும் இல்லை. அறிகுறி இல்லாமல் இருக்கும் 974 நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஏறக்குறைய 76 நாட்கள் லாக் டவுனுக்குப்பின் இப்போது விடுபட்டுள்ளோம்.
நாடு முழுவதிலிருந்தும் 42 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் ஹூபே மாநிலத்துக்கு அனுப்பப்பட்டார்கள். மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், வென்டிலேட்டர் அனைத்தும் வரவழைக்கப்பட்டன. மருத்துவர்களின் தீவிரமான உழைப்பால் பிப்ரவரி 18-ம் தேதியிலிருந்து கரோனா நோயாளிகளின் வருகை குறையத் தொடங்கியது.
இதுவரை வூஹானில் 50,333 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அதில் 3,869 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்கள் சதவீதத்தை 92 ஆக உயர்த்திவிட்டோம். கடந்த 20 நாட்களாக ஹூபே மாநிலத்தில் கரோனா நோயாளிகள் புதிதாக இல்லை. மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள். தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்குகின்றன. பள்ளிகள், கல்லூரிகள் வரும் மே 6-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இனிமேல் வூஹானுக்குள் கரோனா நோயாளிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.