Published : 25 Apr 2020 02:30 PM
Last Updated : 25 Apr 2020 02:30 PM

ஊரடங்கைத் தளர்த்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?

கரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் சுகாதாரம் சார்ந்ததாக அல்லது பொருளாதாரம் சார்ந்ததாக என இரு முனை வாதங்களாகவே இருக்கின்றன. உண்மையில், பொருளாதாரக் கொள்கையானது சுகாதாரப் பின்விளைவுகளைக் கொண்டது. அதேபோல, சுகாதாரக் கொள்கையும் பொருளாதாரப் பின்விளைவுகளைக் கொண்டது.

இந்த விஷயத்தில், ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று முக்கியப் பிரச்சினைகளை தென் ஆப்பிரிக்கா எதிர்கொள்கிறது. அவை, கோவிட்-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொதுச் சுகாதார அச்சுறுத்தல், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சுகாதாரப் பின்விளைவுகள் மற்றும் இந்தத் தொற்றுடன் நேரடித் தொடர்பற்ற, சிக்கலான பிற பொருளாதாரப் பிரச்சினைகள்.

கவனம் தேவை
‘கோவிட்-19’ பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான சாத்தியமான எதிர்வினை என்பது, இந்த மூன்று அம்சங்களையும் ஒருசேர எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், சுகாதாரச் சவால்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவது என்பது, மிகக் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிடும். மேலும், சுகாதார ரீதியிலான பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கவும் செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை, நீடித்த ஊரடங்கு மட்டுமே, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுவித்துவிடும் என்பது சரியான வாதம் அல்ல. உண்மையில், அது சுகாதார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தாங்கவே முடியாத விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஆரம்பக்கட்ட ஊரடங்கின் காரணமாக, சமூகப் பரவலின் ஆபத்து தணிந்திருப்பதாகவே தெரிகிறது. எனினும், ‘கோவிட்-19’ தொற்றுக்கு உள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம். குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள்தான் இதுவரை நடந்திருக்கின்றன. இதனால், தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கான சமூக அளவிலான பரிசோதனைகள் தாமதமாகின்றன.

ஊரடங்கின் மூலம் கரோனா வைரஸின் ஆரம்பக்கட்டப் பரவலைத் தடுப்பது என்பது குறுகிய காலத்துக்குக் கைகொடுக்கிறது என்று தற்போது கிடைத்திருக்கும் சான்றுகள் சொல்கின்றன. சமூக அளவிலான பரிசோதனையைத் தீவிரப்படுத்துவது, அடையாளம் காணப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது, அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் குறைந்தபட்சம் 14 நாட்களுக்காவது தனிமைப்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால், தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பொருளாதாரத்தின் தேவை மற்றும் வழங்கல் ஆகிய இரண்டு விஷயங்களிலும் தென் ஆப்பிரிக்காவுக்குப் பாதிப்புகள் ஏற்படும். இது இன்னொரு வகையில், சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும். உதாரணத்துக்கு, ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் உள்ளிட்ட பிற சுகாதார சேவைகளிலும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஊரடங்கின் பொருளாதார விளைவுகளும் மிக மோசமானவை. தற்போதைய ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு நாளும் 13 பில்லியன் ராண்டுகள் (தென் ஆப்பிரிக்கக் கரன்ஸி) மதிப்பிலான பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாக ஆரம்பக்கட்ட கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு மட்டும், சுமார் 3.70 லட்சம் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்று தென் ஆப்பிரிக்க ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் ஆரம்பக்கட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் மீது குவிந்திருந்த கவனம் தற்போது, குறைந்த மற்றும் நடுத்தர நெருக்கடியின் அடிப்படையிலான சுகாதார மற்றும் பொருளாதார வியூகங்களின் மீது விழ ஆரம்பித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்குக்குப் பிறகான சுகாதார மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக சில பரிந்துரைகளை நாங்கள் வழங்குகிறோம்.

கீழ்க்காணும் அனுமானங்களிலிருந்து நாம் விவாதிக்கலாம்.

தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலோ அல்லது மக்களிடம் போதுமான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாவிட்டாலோ ஒழிய, தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸை ஒழிக்க முடியாது. எனவே, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 2020-ம் ஆண்டின் எஞ்சிய நாட்களுக்கு அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரையிலான காலகட்டத்துக்குத் தேவையான நிலையான வியூகத்தை முன்வைப்பது அவசியம்.

கரோனா வைரஸைத் தடுப்பதற்கான நீண்டகால உத்தியாக ஒட்டுமொத்த ஊரடங்கை முன்வைப்பது பொருத்தமாக இருக்காது. ஏனென்றால், இந்நடவடிக்கை காரணமாக சமூகம், பொதுச் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நீண்டகால பாதிப்புகள் உள்ளிட்ட தீய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதேசமயம், உரிய சுகாதார மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல், ஊரடங்கை விலக்கிக்கொள்வது மேலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும். அது மேலும் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஊரடங்கைத் தாண்டி, தென் ஆப்பிரிக்கா மேற்கொள்ள வேண்டிய சுகாதார மற்றும் பொருளாதார வியூகங்கள், சிறந்த சுகாதாரச் சேவையை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாக நீடிக்கும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும். ஜெர்மனியிலும், இந்திய மாநிலமான கேரளத்திலும் இதுபோன்ற அணுகுமுறையை ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

முக்கிய அம்சங்கள்
முதலாவதாக, வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும். கூடவே, மக்களிடம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக உருவாகும் சூழலை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர், பிற நோயாளிகள் என எவ்வளவு முடியுமோ அவ்வளவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார சேவை அமைப்புகளைப் வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகாத வகையில் தனிமனிதர்களைக் காக்க வேண்டும். நான்காவதாக, இவற்றின் அடிப்படையில், சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான பொருளாதார நடவடிக்கைகளைச் சாத்தியப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், சில பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பரிசோதனையின் முக்கியத்துவம்
முதலில், தொற்று விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஏப்ரல் இறுதிவரை வைரஸ் தொற்றைக் கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்களின் தொடர்புகளைப் பற்றி விசாரிக்கவும் விரிவான நடவடிக்கைகள் அவசியம். தனிமனித இடைவெளியைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். அறிகுறிகள் தென்படுபவர்களிடம் மட்டுமே பரிசோதனை நடத்துவது, தொற்று விகிதத்தைக் குறைக்க உதவாது. ஏனெனில், அறிகுறிகள் தென்படுவதற்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், அறிகுறிகளே இல்லாதவர்கள் ஆகியோரிடமும் கரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதை வெற்றிகரமாகச் செய்ய, குறைந்தபட்சம் தென்கொரியா மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு நிகராகத் தென் ஆப்பிரிக்காவும் பரிசோதனைகளை நடத்த வேண்டும். இதில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றால், ஜெர்மனிக்கு நிகராகப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அதாவது, தினமும் 36,399 பேருக்குப் பரிசோதனை நடத்த வேண்டும்.

இரண்டாவதாக, கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவிக்கொண்டிருக்கும் வைரஸைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுடன், பொருளாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். இதற்கு, இடர்ப்பாடு சார்ந்த பொருளாதார வியூகம் அவசியம்.

முதலில் எவற்றைத் திறப்பது?
சமீபத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் முன்மொழியப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில், வெவ்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கலாம். தொற்று ஏற்படுவதற்கான சூழல் குறைவாக இருக்கும் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் (உதாரணம்: தானியங்கி இயந்திரங்கள் அதிக அளவில் உள்ள தொழிற்சாலைகள்), தொற்றுக்குள்ளாகும் அபாயம் குறைந்தவர்கள் தொடர்பான தொழில்கள் (உதாரணம்: குழந்தைக் காப்பகங்கள்) போன்றவற்றை முதலில் இயங்கச் செய்யலாம். தொற்று விகிதம் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் தொழில் நிறுவனங்களைத் திறக்கலாம். இவை அனைத்துமே, தொற்று தொடர்பான விரிவான தரவுகள், குடும்ப அமைப்புகள், பொதுப் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மிகக் கவனமாகச் செய்யப்பட வேண்டியவை.

இவற்றைச் சாத்தியமாக்க, அதிகமானோருக்குப் பரிசோதனை நடத்துதல், திறக்கப்படும் நிறுவனங்களில் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் வகையிலான சூழல் இருக்கிறதா என்பது குறித்த துல்லியமான தரவுகள் போன்றவை அவசியம். இவற்றைக் கவனமாக அமல்படுத்துவதன் மூலம், சுகாதார மற்றும் பொருளாதார வியூகத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.

(குறிப்பு: இந்த வியூகங்கள் அனைத்தும் இப்போதுள்ள நிலையில் இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)

- கட்டுரையாளர்கள்: ஷாபிர் மதி, அலெக்ஸ் வான் டென் ஹீவர், டேவிட் பிரான்சிஸ், இம்ரான் வலோடியா, மார்ட்டின் வெல்லர், மைக்கேல் சாஸ்

நன்றி: ‘தி கான்வர்சேஷன்’ இணைய இதழ் | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x