

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், “நாம் ஆபத்தில் இருக்கிறோம். அதனை அதிகரிக்க வேண்டாம். பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் ஊரடங்கை மீறும் மக்கள் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஊரடங்கை உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.