

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, எப்போதும் இல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை (நிலவு) ஆய்வுக் குழு நேற்று வெளியிட்ட தகவலில், ''வானில் பிறை காணப்பட்டதையடுத்து, புனித ரமலான் மாத நோன்பு நாளை (24-ம் தேதி) முதல் நாளாகக் கொண்டு தொடங்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக சமூக விலகல் தீவிரமாக வளைகுடா நாடுகளில் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த ஆண்டு ரமலான் நோன்பு வழக்கமான உற்சாகம் இல்லாமல் இருக்கிறது. மேலும், இஸ்லாமியர்களின் புனித மெக்கா, மெதினாவுக்கும் மக்கள் வந்து தொழுகை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே தொழுகை நடத்த உள்ளனர்.
சவுதி அரேபிய ராயல் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், “ வானில் பிறை தென்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் புனித ரமலான் மாத நோன்பு தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளது.
புனித ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். மசூதிக்கு வந்து யாரும் தொழுகை நடத்தக்கூடாது என்று சவுதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் கூறுகையில், “புனித ரமலான் மாதம் தொடங்கும் சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் கூட்டமாக மசூதிகளில் தொழுகையும், சிறப்பு இரவு நேரத்தொழுகையும் நடத்த முடியாத சூழல் எனக்கு வேதனையாக இருக்கிறது. மக்களின் உடல் நலன், உயிர் பாதுகாப்பு கருதி கரோனா வைரஸை எதிர்க்கும் பொருட்டு மசூதிகள் மூடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து உலகத் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்
கத்தார் நாட்டு அரசின் அறிவிப்பின்படி ஷாபான் மாதம் வியாழக்கிழமை முடிந்துவிட்டது. புனித ரமலான் மாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மக்கள் நோன்பைத் தொடங்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் நாடான இந்தோனேசியாவிலும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் புனித நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி நோன்பிருக்க அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.