

வங்க தேசத்தில் மே 5 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கதேச உள்ளூர் ஊடகங்கள், “ வங்க தேசத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் ஊரடங்கை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மே 5 ஆம் தேதிவரை வங்கதேசத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிக்கை நாளை வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு ஏப்ரல் 25 ஆம் தேதி வரை தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது.
வங்கதேசத்தில் கரோனா தொற்று 3,772 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 120 பேர் பலியாகி உள்ளனர். 92 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 26, 39,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,84,263 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து மீண்டுள்ளனர்.