

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்கும் இந்திய பெண் மருத்துவருக்கு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களின் அணிவகுப்பு மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் கனெடிக்கட் பகுதியில் சவுத் விண்ட்சோர் நகரம் உள்ளது. இங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவர் உமா மதுசூதன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டு வாசலில் நின்றார். அப்போது, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்தன. முதல் வாகனத்தில் வந்த நபர், காரில் இருந்து இறங்கி, மருத்துவர் உமா மதுசூதனை போற்றி புகழ்பாடும் பதாகையை வாயிலில் ஊன்றினார். அடுத்தடுத்து தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனம் என பல்வேறு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்தன. ஒவ்வொரு வாகனமும் உமா மதுசூதன் வீட்டு வாசலில் சில நிமிடங்கள் நின்று ‘நன்றி டாக்டர் மதுசூதன்’ என்று கூறி மரியாதை செலுத்தின.
தீயணைப்பு, போலீஸ் வாகனங்கள் சைரன் ஒலியை எழுப்பின. இதர வாகனங்களின் 'சன்ரூப்' மேற்கூரையில் நின்ற மக்கள் மதுசூதனுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சிலர் வாழ்த்து பதாகைகளை அசைத்தவாறு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த மதுசூதன் அங்குள்ள ஜேஎஸ்எஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த 1990-ம் ஆண்டு எம்பிபிஎஸ் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் குடியேறி அங்கு மருத்துவ சேவையாற்றி வருகிறார்.