

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது.
அந்த வகையில் அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு தற்போது உருவாக்கியுள்ள மருந்தை மனித உடல்களில் செலுத்திப் பரிசோதிக்கும் செயல்பாட்டில் நாளை முதல் இறங்குகிறது.
கரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கரோனாவுக்கான தடுப்பு மருந்து கிடைக்கும் என்று கடந்த வாரத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு உறுதியளித்தது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் மருந்தை மனித உடல்களில் செலுத்திப் பரிசோதிக்க உள்ளது.
பிளேக்கைப்போல், கரோனோ வரலாற்றுக் காயமாக மாறியுள்ளது. இதுவரை உலக அளவில் 25,80,729 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 6,93,093 பேர் குணமாகியுள்ள நிலையில், 1,78,371 பேர் உயிரழந்துள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை.
கரோனா தொற்று உள்ளானவரைத் தனிமைப்படுத்தி கூடுதல் மருத்துவக் கவனிப்பு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்காக அப்பல்கலைக்கழகத்துக்கு 2 கோடி பவுண்ட் நிதியுதவி வழங்கப்படும் என்று லண்டன் சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தவிர லண்டன் இம்பீரியல் கல்லூரியும் கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அக்கல்லூரிக்கு 2.5 கோடி பவுண்ட் அளவில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.