

கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, நெப்ராஸ்கா உள்ளிட்ட பகுதிகளின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, வீட்டுத் தனிமைக்கு எதிரான பதிவுகளை நீக்க முடிவு செய்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில், சமூக விலகலும், ஊரடங்கும் அமலில் உள்ளது. இதுவரை கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாகவும் அமெரிக்கா மாறியுள்ளது. கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 ஆயிரம் பேர் இந்த தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் சமூக விலகல், ஊரடங்கு தொடர்பான அறிவுறுத்தல்கள் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா தொற்று கட்டுக்குள் வராததால், ஊரடங்கை அமெரிக்க அரசாங்கம் நீட்டித்துள்ளது. அத்தியாவசிய வியாபாரங்கள் தவிர மற்ற அனைத்து விதமான கடைகளும், பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் பார்சலில் மட்டுமே உணவு எடுத்துச் செல்ல அனுமதி மேலும் அவசர தேவையைத் தாண்டி யாரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள பலர், இதற்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு கூட்டம் திரட்டுகின்றனர். வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டாம், வெளியே வந்து போராட வேண்டும் என்று கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவுகள் அரசு விதிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் இவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் கூறியுள்ளார்.