Published : 21 Apr 2020 07:24 PM
Last Updated : 21 Apr 2020 07:24 PM

நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்: தொழிலாளர்களிடம் கைவிரிக்கும் அமெரிக்கா

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது கரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் குறைக்கும் என்றாலும், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலைக்காகத் தினமும் வெளியில் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை. உற்பத்தித் துறை, பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், சேமிப்புக் கிடங்குகள், சில்லறை விநியோகக் கடைகள், உணவகங்கள் ஆகிய அத்தியாவசிய நிறுவனங்களில் பணிபுரியும் அவர்கள், கரோனா தொற்றைப் பரப்பும் வாய்ப்புள்ள சக ஊழியர்களுடனும், வாடிக்கையாளர்களுடனும் பணி செய்ய வேண்டிய அபாயத்தை தினமும் எதிர்கொள்கிறார்கள்.

பாதுகாப்பு இல்லை
பலசரக்குக் கடைகள், பரந்து விரிந்த சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றில், வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்கிறார்கள் தொழிலாளர்கள். பணியிடத்தில் போதுமான கிருமிநாசினிகள், பாதுகாப்பு சாதனங்கள் இல்லை என்றும், ஆறு அடி சுற்றளவு கொண்ட இடத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் ‘வால்மார்ட்’ நிறுவன ஊழியர்கள் கூறியிருப்பது ஓர் உதாரணம். அருகருகே நின்றுகொண்டு வேலை பார்க்க வேண்டிய சூழலைக் கொண்ட இறைச்சி பதப்படுத்தும் ஆலைகளில், இந்த ஆபத்து இன்னும் அதிகம்.

தங்களுக்கு முகக்கவசங்களோ, தனிநபர் சுகாதார சாதனங்களோ தரப்படவில்லை என்கிறார்கள் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள். தொழிலாளர்கள் தங்கள் பணி நேரத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது, மேலும் பலருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கண்டுகொள்ளாத அரசு
கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கி பல வாரங்கள் ஆகியிருக்கும் நிலையிலும், முன்னணியில் பணிபுரியும் தொழிலாளர்களை, குறிப்பாகத் தங்கள் தொடர்ச்சியான பணிகள் மூலம் சக அமெரிக்கர்களின் இயல்பு வாழ்க்கை நீடிப்பதை உறுதிசெய்யும் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

அமெரிக்கத் தொழிலாளர் துறையின் கீழ் இயங்கிவரும் தொழிலாளர் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவான, ‘தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அமைப்பு’ இந்த விஷயத்தில் பெரிய அளவில் தலையிடவில்லை. கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா எனும் புகார்களை விசாரிக்க, கடந்த வாரம்தான் முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறது ‘ஓஷா’.

மறுபுறம், நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்கவும் அனுமதி வழங்கியிருக்கிறது. தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் அந்த நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப இயங்கிவருகின்றன.

“இவ்விஷயத்தில் ‘ஓஷா’ ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்வரை, ‘தொழிலாளர்களுக்கு வேறு ஏதோ இடத்திலிருந்துதான் தொற்று ஏற்பட்டிருக்கும். இதெல்லாம் எங்கள் பொறுப்பு அல்ல’ என்று நிறுவனங்கள் சொல்லிவிடும்” என்கிறார், ஐக்கிய உணவு மற்றும் வணிகத் தொழிலாளர் சங்கத்தின் சர்வதேசத் தலைவரான மார்க் பெர்ரோன். 13 லட்சம் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு இது.

விதிமுறைகள் கட்டாயமல்ல!
அமெரிக்காவின் ‘நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது’ (சி.டி.சி) தொழிலாளர்களைப் பாதுகாக்க தேசிய அளவிலான விதிமுறைகளை வழங்கியிருக்கிறது. தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி தெளிப்பு, முகக்கவசம் அணிவது போன்றவை அடங்கிய விவேகமான விதிமுறைகள் அவை. ஆனால், பணியிடங்களில் இந்த விதிமுறைகளை ‘ஓஷா’ கட்டாயமாக்கவில்லை. சி.டி.சி-யே இதை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சி.டி.சி-யின் விதிமுறைகளைப் பெரிய நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று ‘ஓஷா’ கேட்டுக்கொண்டால்தான், முறையான ஆய்வுகளை நடத்தி அபராதம் விதிப்பதை அந்த அமைப்பால் அமல்படுத்த முடியும்.

தொழிலாளர் பாதுகாப்புக்கான தனது முந்தைய விதிமுறைகளே, பெருந்தொற்று காலத்துக்கும் பொருந்தும் என்று ‘ஓஷா’ கூறியிருக்கிறது. இத்தனைக்கும் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான புகார்களை விசாரிக்க அரசு நிறுவனங்களுக்கு ‘ஓஷா’ அனுமதியளித்திருந்தது. இது தொடர்பாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாதுகாப்பான, சுகாதாரமான பணியிடத்தை வழங்குவது நிறுவனங்களின் பொறுப்பு. அது தொடர வேண்டும்” என்று குறிப்பிட்ட ‘ஓஷா’ அமைப்பு, பணியின்போது ஒரு தொழிலாளர் கொல்லப்பட்டாலோ, படுகாயமடைந்தாலோ அது தொடர்பான முறையான புகார்களை விசாரிப்பதாகவும் கூறியிருந்தது. எனினும், ‘கோவிட்-19’ விஷயத்தில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், ஒரு தரநிர்ணயமோ, ஒழுங்குமுறையோ அல்ல என்றும், இது புதிய சட்டக் கடமைகளை உருவாக்காது என்றும் அதில் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, கரோனா தொற்று தொடர்பான ஆயிரக்கணக்கான புகார்கள் ‘ஓஷா’ அலுவலகங்களுக்கு வந்தாலும், அவற்றை முழுமையாக விசாரிப்பதற்குத் தேவையான நிதி வசதி அவற்றுக்கு இல்லை. ஓரெகான் மாநிலத்தில் மட்டும், பணியிடச் சூழல் குறித்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் 2,747 புகார்கள் வந்தன. ஆனால், அவற்றில் ஒரு புகாரும் விசாரிக்கப்படவில்லை என்று ‘தி போர்ட்லாண்டு ட்ரிபியூன்’ இதழுக்கு அளித்த பேட்டியில் அம்மாநில ‘ஓஷா’ அலுவல நிர்வாகி கூறியிருக்கிறார்.

“தற்சமயத்துக்குக் ‘கோவிட்-19’ தொடர்பாக, எதையும் செயல்படுத்துவதற்கான அதிகார வரம்பு எங்களிடம் இல்லை” என்று இல்லினாய்ஸில் கரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்த ‘வால்மார்ட்’ ஊழியர்களின் சார்பாக வாதாடும் வழக்கறிஞரிடம் ‘ஓஷா’ கூறியிருக்கிறது. நிறுவனங்கள் தாங்களாகவே விசாரணை நடத்தி, அறிக்கையைத் தங்களுக்கு அனுப்புமாறும் ‘ஓஷா’ கேட்டுக்கொண்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு
“நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ‘ஓஷா’விடமிருந்து சொல்லப்படும் செய்தி, ‘நீங்களே உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பதுதான்” என்கிறார் ‘ஓஷா’ அலுவலத்தின் முன்னாள் அலுவலரும், தேசிய வேலைவாய்ப்பு சட்ட திட்டத்தின் நிகழ்ச்சி இயக்குநருமான டெப்பி பெர்கோவிட்ஸ்.

“அந்த வகையில், கலிபோர்னியாவின் ஈஸ்ட்வேல் நகரில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அம்மாநில ‘ஓஷா’ அலுவலகத்தில் அளித்த புகார்கள் விசாரிக்கப்படப்போவதில்லை என்றே தெரிகிறது” என்கிறார் அவர்.

தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை அனுப்புவதில் அவசரம் காட்டும் அமேசான் நிறுவனம், தனிநபர் இடைவெளியைப் பராமரிக்க முடியாமலும், கைகள், பணியிடங்களைச் சுத்தப்படுத்த போதிய அவகாசம் இல்லாமலும் கஷ்டப்படும் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்று அந்நிறுவன ஊழியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்வதற்கான வசதிகளை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பு இதுபோன்ற தருணங்களில், ‘ஓஷா’ கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. எச்1என்1 வைரஸ் காய்ச்சல் பரவியபோது, சி.டி.சி-யின் விதிமுறைகளை நிறுவனங்கள் பின்பற்றுவதைக் கட்டாயப்படுத்தியது. முகக்கவசம் அணிவது உட்பட எச்1என்1 வைரஸ் பரவலைக் குறைக்க தேவையான விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னது. எனினும், அப்படிச் செயலாற்ற இந்த முறை ’ஓஷா’ தவறிவிட்டது.

புதிய விதிகள் கடுமையானவை, செலவு பிடிப்பவை என்று நிறுவனங்கள் சொல்லலாம். ஆனால், கரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்தும் தாக்கத்தின் விலை மிக மிக அதிகமானது.

*
‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியான தலையங்கம் | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x