Published : 21 Apr 2020 05:57 PM
Last Updated : 21 Apr 2020 05:57 PM

இலங்கையில் கரோனா பரவலால் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

மகிந்த தேசப்பிரிய

ராமேசுவரம்

கரோனா பரவலால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 20-க்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் 2-ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இலங்கையில் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்கிழமை நிலவரப்படி இலங்கையில் 304 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இலங்கையின் மருத்துவர்கள் சங்கம் இலங்கையில் 2000 கரோனா வைரஸ் தொற்றுள்ள நோயார்களுக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் தட்டுப்பாட்டினை சமாளிக்க அந்நாட்டு அரசு இந்திய அரசிற்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் 10 டன் மருத்துவப் பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 25-ந்தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு தேர்தல் ஜூன் 20-ந்தேதி நடைபெறும் என்று இலங்கையின் தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய இன்று செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x