

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் அச்சம் காரணமாக புனித ரமலான் மாதத்திலும் மெக்காவில் உள்ள இரு புகழ்பெற்ற புனித மசூதிகளில் தொழுகை நடத்தத் தடை நீடிக்கும் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹஜ் புனிதப் பயணம் செல்லத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சவுதி அரேபியில் இதுவரை கரோனாவுக்கு 103 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ரமலான் மாதத்தில் புனித மசூதிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
அதற்கு ஏற்றார்போல் சவுதி அரேபிய மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த செய்தியில் புனித ரமலான் மாதத்தில் மக்கள் யாரும் மசூதிக்கு வர வேண்டாம். வீட்டிலேயே தொழுகயை மேற்கொள்ளலாம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் வரும் 24-ம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதால் மெக்காவில் உள்ள பெரிய மசூதி, இறைத்தூதர் மசூதி ஆகியவற்றில் மக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்களா என்று மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
அதுகுறித்து மெக்காவில் உள்ள இரு புனித மசூதிகளின் தலைவர் ஷேக் டாக்டர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சுதாயிஸ் ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ள செய்தியில், “மெக்காவில் உள்ள மிகப்பெரிய மசூதி ( மஜ்ஜித் அல் ஹரம்), இறைத் தூதர் மசூதி (அல் மஜ்ஜித் அல் நபாவி) ஆகியவற்றில் ரமலான் மாதத்திலும் தொழுகைக்கு மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மக்களைத் தொழுகைக்கு அழைப்பது நேரடியாக ஒளிபரப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.