

அமெரிக்க வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்று மைனஸ் -37.63 டாலராக வீழ்ச்சி அடைந்தது.
அதாவது, கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக அளவிலும், அமெரிக்காவிலும் பொருளாதாரச் செயல்பாடுகள் நின்றுவிட்டதால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக கச்சா எண்ணெயய் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் ெசன்றது.
அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்துள்ள பெட்ரோலியக் கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாததால், கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பணத்தைக் கொடுத்து, கச்சா எண்ணெயை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் நிலைக்கு ஒப்பாகும்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து அனைத்தும் கரோனா காரணமாக முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் லாக் டவுன் நீடிப்பதால் மக்கள் வெளியே வராமல் வீ்ட்டுக்குள் இருப்பதால் போக்குவரத்தும் முடங்கி பெட்ரோல், டீசல் தேவை சரிந்துள்ளது.
இதனால் நேற்று நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை -35.34 டாலருக்கு விற்பனையாகி பின்னர் மோசமாக -53.61 டாலராக வீழ்ச்சி அடைந்து இறுதியாக 18.27 டாலர்களில் முடிந்தது. வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் -40.32 டாலர்கள் சரிவைச் சந்தித்தது.
ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை மைனஸ் அளவில் சென்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் பெட்ரோலிய உற்பத்தி செய்யும் நாடுகளான ஒபேக் கூட்டமைப்பு, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொள்வதாக ஒப்பந்தம் உறுதியானதிலிருந்து தேவை குறைந்து வருகிறது.
குறிப்பாக நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 26.30 டாலரிலிருந்து 1.78 டாலராகச் சரிந்தது. சர்வதேச அளவில் போதுமான அளவு தேவை குறைந்தது. கச்சா எண்ணெயைச் சேமித்து வைக்க இடம் இல்லாதது போன்றவை இந்த விலைச்சரிவுக்குக் காரணமாகும்.
இந்த விலைச் சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வாய்ப்பில்லை. மீண்டும் இயல்பு நிலை திரும்பும்போது, கரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை சரிசெய்ய உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி பயனைத் தான் எடுத்துக்கொள்ளவே முயற்சிக்கும்.