

சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 1,426 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, “சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 1,426 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,014 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள்” என்று தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் வேலை செய்து வருகின்றனர். இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.