

சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 596 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூரில் தங்கியிருக்கும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இந்தியத் தொழிலாளர்களும் உள்ளனர்.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர்.
பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் குறைந்த ஊதிய வேலைகளைச் செய்து வருகின்றனர். இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள 596 நபர்களில் 571 பேர் இத்தகைய விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குறைந்த ஊதியத் தொழிலாளர்களே. மீதமுள்ள 25 பேர் மட்டுமே சிங்கப்பூர் நாட்டு குடிமக்கள்.
இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், ”வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் நோய்த் தொற்றைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அதன் விளைவு தெரிய ஆரம்பிக்கும்’” என்றார்.
சிங்கப்பூரில் இதுவரை 6,588 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 740 பேர் மீண்டுள்ளனர்.