

தென்கொரியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையாகப் பதிவானது.
இதுகுறித்து தென்கொரியாவின் நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு தென்கொரியாவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாகப் பதிவாகியுள்ளது. தென்கொரியாவில் பாதிப்பு எண்ணிக்கை 10,661 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 234 ஆக பதிவாகியுள்ளது” என்றார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறும்போது, “குடிமக்களின் ஒருங்கிணைந்த சக்தியுடன் புதிய அன்றாட வாழ்க்கையை அரசு தயார் செய்யும்” என்று தெரிவித்தார்.
தென்கொரியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியதற்காக உலக நாடுகள் பலவற்றால் அந்நாட்டு அதிபர் பாராட்டப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு மக்கள் மூன் ஜே இன்னுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுக்கு 23,32,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,60,767 பேர் பலியான நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.