

சீனாவின் டியாஞ்ஜின் நகரின் துறைமுக எரிவாயு கிடங்கில் விபத்து ஏற்பட்டு 120 பேர் பலியானது தொடர்பாக கடமையிலிருந்து தவறியதாக குற்றம்ச்சாட்டி 11 பேரை சீன போலீஸார் கைது செய்தனர்.
சீன துறைமுக நகரான டியாஞ்ஜினில் ரசாயன மற்றும் நச்சு பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கிடங்குகளில் நடந்த வெடிப்புச் சம்பவங்களில் தொடர்ந்து ஒரு கிமீ தூரம் பற்றி எரிந்தது. இந்த பயங்கர வெடிவிபத்துக்கு சுமார் 120 பேர் பலியாகினர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நகரமே பயங்கரமான சுற்றுச்சூழல் மாசால் பாதிக்கப்பட்டது.
ரசாயனம் மற்றும் நச்சு கிடங்குகள் அதிகம் இருக்கும் அந்த நகரத்தில் ஏற்பட்ட தீயால் ஒரு வாரத்துக்கு தொடர் விபத்துகளும் கசிவுகளும் இருந்து வந்தது.
இந்த விபத்து தொடர்பாக 11 பேரை சீன போலீஸார் கைது செய்துள்ளனர். கடமையிலிருந்து தவறியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.