Published : 17 Apr 2020 06:58 PM
Last Updated : 17 Apr 2020 06:58 PM

கரோனா எதிரொலி: கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் சீனாவின் ஜிடிபி சரிவு

கரோனா வைரஸ் உலகளாவிய அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் சரிந்துள்ளது.

இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சரிவு ஆகும். சீனா 1992-ம் ஆண்டு முதல் நாட்டின் உள்நாடு வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டு வருகிறது. முதன்முறையாக தற்போதுதான் அதன் வளர்ச்சி விகிதம் எதிர்நிலைக்குச் சென்றுள்ளது.

பொருளாதார அளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகத் திகழ்ந்துவரும் சீனாவின் வளர்ச்சி பெரும் சரிவுக்கு உள்ளாகியிருப்பது பிற நாடுகளிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே அங்கு மிக வேகமாக பரவத் தொடங்கியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக வூஹான் உள்ளிட்ட உற்பத்தி மையங்களை முற்றிலும் சீனா முடக்கியது. இதன் காரணமாக சீனா மட்டுமல்ல, சீனாவை நம்பியிருந்த பிற நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின.

இந்தியா மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்களுக்கு சீனாவையே நம்பி இருந்தது. தவிர, மின்னணு சாதனங்களுக்குத் தேவையான உதரி பாகங்களை சீனாவிடமிருந்து இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திலேயே இந்தியத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடியை உணரத் தொடங்கின.

கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதம் அளவில் இருந்தது. தற்போது தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடக்கத்தைச் சந்தித்துள்ள நிலையில் அதன் உள்நாட்டு வளர்ச்சி கடுமையாகச் சரிந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக சீனாவில் தொழில் செயல்பாடுகள் முடங்கியிருந்தன. இதனால் வேலையிழப்பு, சிறு குறு நிறுவனங்கள் திவால் நிலைக்குச் சென்றிருப்பது, வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக ஜனவரி முதல் மார்ச் வரையிலான சீனாவின் நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி, முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் சரிந்துள்ளது.

இருந்தபோதிலும் நடப்பு ஆண்டு முழுமையாக நேர்மறை வளர்ச்சி விகிதத்தை எட்டும் இரு நாடுகளில் சீனாவும் ஒன்று என்று ஐஎம்எஃப் ( சர்வதேச நாணய நிதியம்) தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் மட்டுமே பெரிய பொருளாதார நாடுகளில் நேர்மறை வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அளவிலும் சீனாவின் வளர்ச்சி 1.2 சதவீதம் அளவிலும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

1929-ம் ஆண்டு உலக நாடுகள் எதிர்கொண்ட நெருக்கடி காலகட்டத்தைப் போன்ற ஒரு மிகப் பெரும் பொருளாரத நெருக்கடி தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி -3 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சி முன்னிலையில் இருக்கும் நாடுகள் நடப்பு ஆண்டில் எதிர்நிலை வளர்ச்சியைக் காணும் என்றும் ஐஎம்எஃப் தெரிவித்து இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் வளர்ச்சி -5.9 சதவீதமாகவும், ஜப்பானின் வளர்ச்சி -5.2 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் இங்கிலாந்து –6.5 சதவீதம், ஜெர்மனி -7.0 சதவீதம், பிரான்ஸ் -7.2 சதவீதம் இத்தாலி -9.1 சதவீதம், ஸ்பெயின் -8.0 சதவீதம் அளவில் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் ஐஎம் எஃப் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x