

அரசியல் களத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் முயற்சியில் முன்னாள் அதிபர் ராஜபக்ச ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இன்று நள்ளிரவு முதல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக நாடு முழுவதும் 12314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 13 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 20 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தவிர ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்புகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர்.
ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார். ஆனால் அந்த கூட்டணியின் தலைவரும், அதிபருமான மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சவை ஒருபோதும் பிரதமராக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எதிர்த்தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே பிரதமர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ராஜபக்சவும் ரணிலும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்தனர். நேற்றுமுன்தினம் மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.