

கரோனா வைரஸுக்கு முழுமையாக மருத்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளி ஒருவருடம் வரை தேவை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானொலி ஒன்றுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அளித்த நேர்காணலில் கூறும்போது, “ சமூக விலகலை கடைப்பிடிக்கும் எதிர்காலத்திற்கு நாம் பழக வேண்டிய தேவை இருக்கிறது. கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஒருவருடம் கூட ஆகலாம். ஆனால் அதனை பற்றி நான் இப்போது ஊகிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கரோனோ தொற்று தீவிரம் தற்போது குறைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் கூடுவதற்கும் பயணங்களுக்கும் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்தன. இந்நிலையில் கரோனா தொற்று தீவிரம் குறைந்துள்ள நிலையில், அக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு ஏற்கவில்லை.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 6,468 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 21, 83,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1, 46,870 பேர் பலியாகியுள்ளனர்.