

கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே மனிதாபிமான அடிப்படையில் ஏமனுக்கு சவுதி அளித்த நிதி உதவியை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
உள்நாட்டுப் போரினால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள ஏமனுக்கு உதவும் பொருட்டு 500 மில்லியன் அமெரிக்க டாலரை சவுதி இளவரசர் முகமது பின் சல்மான வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் சவுதியின் இம்முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, ”சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்த முயற்சியை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் சவுதி எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
ஏமனில் சுகாதார அமைப்பு ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. எனினும் அங்கு கரோனா தொற்று பெரிதாக ஏற்படவில்லை. இந்நிலையில் மலிவு விலை கிருமிநாசினி கூட ஆடம்பரப் பொருளாகவே அங்கு பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அங்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு அங்கு ஏற்படும் ஏற்படும் என்று உலக சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.