கரோனா ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக்கான 6.50 லட்சம்  கருவிகள் இன்று இந்தியா வருகை: இந்தியத் தூதரகம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரிசோதனையில் முக்கியமானதாகக் கருதப்படும் ரேபிட் ஆன்ட்டிபாடி கிட், ஆர்என்ஏ பரிசோதனைக் கருவிகள் என 6.50 லட்சம் உபகரணங்கள் இன்று இந்தியா வந்து சேரும் என சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் முக்கியமாக சமூக விலகலைக் கடைப்பிடித்து, கரோனா சங்கிலியை உடைக்கும் வகையில் லாக் டவுன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளைக் கண்டறியும் விதமாக நாள்தோறும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இருப்பினும் தற்போது நடத்தும் பரிசோதனைகளின் அளவு போதாது. இன்னும் கூடுதலாக நடத்தப்பட வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த சோதனைக்கான பரிசோதனைக் கருவிகள் போதுமான அளவு இல்லாததால் சீனாவிடம் மத்திய அரசு ஆர்டர் செய்திருந்தது. அந்தக் கருவிகள் இந்தியாவுக்கு வரும்போது பரிசோதனைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்.

இதுகுறித்து பெய்ஜிங்கிற்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா பரிசோதனைக்காக 20 லட்சம் பரிசோதனைக் கருவிகள் இந்தியா சார்பில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6.5 லட்சம் கருவிகள் இன்று அனுப்பி வைக்கப்படும். ரேபிட் ஆன்ட்டிபாடி டெஸ்ட், ஆர்என்ஏ எக்ஸ்ட்ராகஸன் கிட் ஆகியவை இன்று குவாங்சு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இந்தியா செல்லும்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக கடந்த 2 மாதங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் இப்போது தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவக் கருவிகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in