

பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,297 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் ஊடகம், “பாகிஸ்தானில் நேற்று வெளியிட்ட சோதனை முடிவுகளையடுத்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,297 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் பலியாகியுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 3,016 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 1,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய மாகாணமான பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் நாளும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு அமல்படுத்தியுள்ளார் பிரதமர் இம்ரான் கான்.
ஏற்றுமதித் துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம், மென்பொருள் மேம்பாடு மற்றும் காகிதம், சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் உர ஆலைகள் ஆகியவற்றுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20,83,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,34,658 பேர் பலியாகியுள்ளனர்.