

ஆப்பிரிக்க நாடுகளிலும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத் தொடங்கி இருக்கிறது, கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டுமே உலகமும், மக்களும் இயல்புநிலைக்கு திரும்புவார்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
நியூயாக்கில் ஐநா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் 50-க்கும் மேற்பட்ட ஆப்பிரி்க்க உறுப்பு நாடுகளுடன் காணொலி மூலம் நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகம் முழுவதையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளார்கள்.
இ்ந்த கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பூசி கொண்டு வந்தால் மட்டுமே உலகமும், மக்களும் இயல்புநிலைக்குத் திரும்பமுடியும். லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க முடியும், கணக்கில் அடங்கா லட்சம்கோடி பொருளாதார பேரழிவைத் தடுக்க முடியும்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நாடுகள் வேகமாக மீண்டெழ வேண்டும், உலகளவில் நலம் பெற, தடூப்பூசி இருந்தால்தான் அந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். 2020-ம் ஆண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து, அதிகபட்சமான வேகத்தில் செயல்படுவது அவசியம்.
ஐரோப்பா, ஆசிய நாடுகளை அச்சுறுத்திய கரோனா வைரஸ் அடுத்ததாக ஆப்பிரிக்காவில் நுழைந்துள்ளது. இதைத் தொடக்கத்திலேய தடுக்காவிட்டால் பேரழிவை ஏற்படுத்தும். ஐநா சபையும், ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. தொடக்கித்திலேயே சிலநாடுகள் துரிதமாகச் செயல்பட்டு பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள்
உகாண்டா, நமிபியா, எகிப்து நாடுகள் லாக்டவுனால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவியும், உணவும் அளித்து சமூகநிதியுதவியை அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது
இவ்வாறு குட்டரெஸ் தெரிவித்தார்