

பிரேசிலில் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 99 வயது நிரம்பிய ராணுவ வீரர் ஒருவர் கரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
கரோனா தாக்குதலிலிருந்து மீண்ட அவரை அந்நாட்டு ராணுவத்தினர் ராணுவ மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.
பிரேசிலைச் சேர்ந்த எர்மண்டோ பிவெட்டா, இரண்டாம் உலகப் போரில் பிரேசிலின் பீரங்கிப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்டாகப் பணியாற்றியவர். கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் எர்மண்டோ முழுமையாக குணமடைந்தார். இந்த நிலையில் அவர் குணமடைந்ததைக் கொண்டாடும் விதமாக, வாத்தியங்கள் முழங்க அவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
''இது எனக்கு போரை விட மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. போரில் நீங்கள் கொல்லப்படுவீர்கள் அல்லது வாழ்வீர்கள். ஆனால் இங்கு நீங்கள் வாழ்வதற்காகவே நோய்க்கிருமியுடன் சண்டையிட வேண்டியதாக உள்ளது'' என்று எர்மண்டோ தெரிவித்தார்.
இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ''எர்மண்டோ பிவெட்டா மீண்டும் ஒரு போரில் வெற்றியடைந்துள்ளார். முந்தைய முறை நாடுகளிடையேயான போரில். இம்முறை கரோனாவுக்கு எதிரான போரில்'' என்று தெரிவித்துள்ளது.
பிரேசிலில் 25,262 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 1,532 பேர் இறந்துள்ளனர். 14,026 பேர் குணமாகியுள்ளனர்.
கரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு இரண்டாம் உலகப் போரைவிட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்பட்டு வருகிற நிலையில், அந்த அழிவுக் காலத்திலும் போராடிய ஒரு ராணுவ வீரர், தற்போது கரோனா தாக்குதலுக்குள்ளாகி மீண்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.