

சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு கோவிட்-19 வைரஸ் உண்மை நிலவரங்களை சரிவர மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று உலகச் சுகாதார அமைப்புக்கான நிதிப்பங்களிப்பை நிறுத்தியதன் மூலம் அமெரிக்கா கோவிட்-19 நெருக்கடியில் உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலிருந்து தன்னிச்சையாக விலகியுள்ளது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீனாவின் அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் கூறியதாவது:
கோவிட்-19 நோய்ப் பரவியது முதல் குறிப்பாக உலகச் சுகாதார அமைப்பு அதன் தலைமை இயக்குநர் கேப்ரியேசஸ் மூலம் தன் கடமைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. பன்னாட்டு கூட்டுறவு ஒருங்கிணைப்பில் உலகச்சுகாதார அமைப்பு மையமாகச் செயல்பட்டுள்ளது.
அதற்கான நிதியை அமெரிக்கா நிறுத்தினால் அதனால் கோவிட்-19 பாதித்த அனைத்து நாடுகளும் பாதிக்கும், குறிப்பாக ஏழை நாடுகள் பாதிப்படையும். ஏன் அமெரிக்காவே பாதிப்படையும், எனவே உலகிற்காக அமெரிக்கா தன் கடமையைச் செய்ய வேண்டும். உலகச் சுகாதார அமைப்பை ஆதரிக்க வேண்டும்.
சீனா உலகச் சுகாதார அமைப்புக்கு இந்தத் தருணத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும், கோவிட்-19ஐ அகற்றப்பாடுபடும்.
என்று கூறினார்.