என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து 

என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து 
Updated on
2 min read

டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் தோன்றிய உலக மரண வைரஸான கரோனாவுக்கு இன்று உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை நெருங்குகிறது. ஸ்வைன் ப்ளூ என்ற பன்றிக்காய்ச்சலை விடவும் கரோனா கொடியது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு காலத்தில் நியூயார்க் என்றால் சொர்க்கபுரி ஆனால் இன்று மரணக்கூடம். ஆம், அங்கு 10,000 பேர் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர்.

நியூயார்க், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் வகையாகச் சிக்கியுள்ளன. இது அமெரிக்காவின் பிற மூலைகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தடம் காண்டும் தரவியல் படி அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 6,83,000 ஆகும். உலகம் முழுதும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்காவில் பாதிப்பு 582,000 என்றும் உலக அளவில் பாதிப்பு 19 லட்சம் என்றும் ஏன் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

ஆனாலும் உலக அளவில் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அளவு குறையத் தொடங்கியுள்ளது, அமெரிக்காவில் ஆபத்து இன்னும் அதிகமாகும் நிலையில் பொருளாதார முன்னுரிமைகளுக்காக விரைவில் சமூக ஊரடங்கு, லாக்டவுன் ஆகியவற்றை தளர்த்துவது பேராபத்தில் முடியும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஆனாலும் ஸ்பெயினில் சில தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர், இத்தாலியும் கொஞ்சம் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அமெரிக்காவிலும் சில கவர்னர்கள் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்று கூறியதை அடுத்து கடுப்பான ட்ரம்ப், நான் தான் இங்கு முடிவெடுப்பவன், தன்னிச்சையாகச் செயல் பட முடியாது, அதிபர் என்று நான் எதற்கிருக்கிறேன்? என்று எச்சரித்துள்ளார்.

நியூயார்க் கரோனா மையமாகத் திகழ்ந்தாலும் முதல் முறையாக சாவு எண்ணிக்கை 700க்கும் குறைவாக ஒருநாளில் ஏற்பட்டுள்ளது. 2000பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“வைரஸ் இன்னமும் கூட நன்றாகவே தன் வேலையைக் காட்டுகிறது, அது ஒரு கொலைகார கரோனா” என்கிறார் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ.

டாக்டர் செபாஸ்டியன் ஜான்ஸ்டன், இவர் லண்டன் இம்பீரியல் காலேஜின் சுவாச மருத்துவ பேராசிரியர், கூறும்போது, கோவிட் 19 பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உச்சமடைந்து விட்டன, ஆனால் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றில் கரோனா தன் கைவரிசையைக் காட்டலாம் என்று எச்சரித்துள்ளார்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in