

ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்கும் ஜூம் கம்யூனிகேஷன்ஸ் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயலிக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. ஜூம் செயலியில் ஹேக்கர்கள் புகுந்து ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பியதே இதற்கு காரணம்.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தை மிக வன்மையான குற்றமாகக் கருதி,இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைனில் புவியியல் பாடம் குறித்து விளக்கப்படும் வீடியோ காட்சிகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹேக்கர்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டநிலையில் இந்த நிகழ்வு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் செயல்படுகிறது ஜூம் இன்கார்ப்பரேஷன் நிறுவனம். இந்நிறுவனம் 2011-ம் ஆண்டு எரிக் யுவான்என்ற பொறியியல் வல்லுநரால் உருவாக்கப்பட்டு இன்று உலகம்முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஆன்லைன்மூலம் பாட வகுப்புகள் மற்றும்காணொலி காட்சிகள் உள்ளிட்டவற்றை நிகழ்த்த இது மிகவும் உதவியாக உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து இந்த செயலியின் பயன்பாடு 67 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் ஜூம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பாதுகாப்பு தன்மை காரணமாக ஆஸ்திரேலிய ராணுவம், பெர்க்லி, கலிபோர்னியா அரசு பள்ளிகள், நெவடா அரசு பள்ளி, ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், கூகுள், நாசா, நியூயார்க் அரசு பள்ளிகள், ஸ்மார்ட் கம்யூனிகேஷன்ஸ், ஸ்பேஸ்எக்ஸ், தைவான் அரசு, இங்கிலாந்து ராணுவம், அமெரிக்க நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் இந்த செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.