

பிரான்ஸில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரான்ஸில் கரோனா தொற்றுக்கு 424 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிரான்ஸில் கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 424 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கரோனா வைரஸுக்கு இதுவரை 1,17,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று 80 வயதான சீன சுற்றுலாப் பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரான்ஸ் ஐந்தாம் இடத்தில் உள்ளது. பிரான்ஸில் மார்ச் 17 ஆம் தேதி கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.